User:Balunatarajan

From Wikipedia, the free encyclopedia

உபதேசம் என்றால் என்ன?

உபதேசம் என்ற வார்த்தை உப+தேசம் என்ற இரு வார்த்தைகளின் தொகுப்பு. “உப” என்றால் இரண்டு, தேசம் என்றால் இடம்.

உபதேசம் என்றால் இரண்டு இடம். இந்த இரண்டு இடம் என்ன?

திருவடி என்றால் என்ன?

எல்லா ஞானிகளும் இறைவனின் திருவடியை பற்றுங்கள் என்று பறைசாற்றுகின்றனர். திருவடியை மறவாத மனம் தா என்று ஆண்டவனை வேண்டுகின்றனர். நம் உடலில் குடி கொண்டுள்ள ஆண்டவன் ஜோதி சொரூபமான இறைவனின் திருவடி என்றால் என்ன? அவன் எங்கு தன் திருவடியை பதித்து உள்ளான்? அந்த திருவடியை எவ்வாறு பற்றுவது?

இதற்கான விடை தான் திருவடி உபதேசம் , அதாவது திருவடி நம் உடலில் உள்ள இடத்தை சுருதி , யுக்தி , அனுபவம் கொண்டு விளக்கி தெளிய வைப்பது தான் திருவடி உபதேசம். திருவடியை அறிந்து உணர்ந்து தவம் செய்தால் தெய்வீக அனுபவங்கள் பெற்று நாம் நம்மை உணர்ந்து , நம் தலைவனான இறைவனை உணர்ந்து அடைய முடியும்.

நாம் யார்? உடலும், மனமும் மட்டும் தான் நாமா? எது இல்லாவிடின் இவ்வுடல் இயக்கம் செயல்படாமல் நிற்கிறது? எப்போது ஒருவர் இறந்து விட்டார் என்று கூறுகிறோம்? இறந்த உடன் எதோ ஒன்று இவ்வுடலை விட்டு பிரிகிறது அல்லவா! அந்த எதோ ஒன்று இவ்வுடலில் இருப்பதால் தானே நம் உடல், மனம் செயல்படுகிறது. அது என்ன? நமது ஞானிகள் இதை உயிர் என்றும் ஆன்மா என்றும் “ஜீவாத்மா” என்றும் கூறிபிடுகின்றனர். இவ்வுயிர் அழிவற்றது என்றும் நாம் யார் என்ற கேள்விக்கு “நாம் என்பது” நம் உடலில் தங்கியுள்ள உயிர் அதாவது ஜீவாத்மா தான் நான் என்று கூறிப்பிடுகின்றனர்.

இவ்வுயிரை அறிந்து , தெரிந்து, உணர்ந்தாலே நாம் யார் என்பதை தெளிவாக முற்றிலும் உணர முடியும். இவ்வுயிரை அறிய முதலில் இவ்வுயிர் நம் உடலில் எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கு இருக்கிறது என்று தெரிந்தால் தான் நாம் உடலில் அங்கு சென்று அதை உணர முடியும். நம் உயிர் உடலில் எங்கு இருக்க முடியும் என்பதை முதலில் நமது சிற்றறிவால் சிந்தனை செய்து அறிவோம்? அதன் பின் நம் அடைந்த முடிவை ஞானிகளின் பாடல்களின் மூலம் உறுதி செய்து கொள்வோம்.

உயிரின் தன்மை என்ன என்று தெரிந்து கொண்டு பின் அது எந்த இடத்தில் இருக்கும் என்று பார்போம். உயிரின் தன்மை அறிய இறந்த உடலுக்கும் உயிர் தங்கியுள்ள உடலுக்கும் உள்ள வித்தியாசத்தை கொண்டு பார்போம்.

எல்லா உயிர் உள்ள மனித உடலும் ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் உள்ளதை அறியலாம். இறந்த உடலில் இவ்வெப்பம் இல்லாமல் குளிர்ந்து போய் இருப்பதை நாம் பார்க்கலாம். அதனால் உயிரின் ஒரு தன்மை வெப்பம் (அ) ஜோதி என்று அறிந்து கொள்ளலாம். ஆன்மா ஜோதி மயமானது என்ற ஞானிகளின் கூற்றின்படி உயிரின் மற்றொரு தன்மை ஒளி என்பதை அறியலாம்.

இவ்விரு முக்கியமான தன்மையினை கொண்டு உயிர் இருக்ககூடிய இடத்தை ஆராய்வோம்.

முதல் படியாக ஒரு மனிதன் எந்த உறுப்பு இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை பார்போம்? கை, கால் இல்லாமல் உயிர் வாழ முடியும். நம் உடலில் இருதயம் கூட இல்லாமல் ஒரு கருவியின் உதவி கொண்டு நாம் உயிர் வாழ்கிறோம். இதனால் இவ்வுருப்புகளில் உயிர் இல்லை என நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

தலை இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது. தலையே உடலில் பிரதான உறுப்பாக இருக்கிறது. “எண் சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பது சித்தர்கள் வாக்கியம். இதிலிருந்து உடலில் உயிர் தலையில் தான் இருக்கிறது – இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா?

நமது தலையில் எங்கு உயிர் இருக்க முடியும்? ஒரு சிறு உதாரணம் கொண்டு இதை ஆராய்வோம்.

நமது தலையினை ஒரு அறையாக பாவிப்போம். ஒரு விளக்கினை (ஒளி) ஏற்றி நடு அறையில் வைத்தால் தான் அவ்விளக்கின் ஒளி சமமாக எல்லா இடங்களுக்கும் பரவும். அது போலவே நமது உயிரானது சிரசின் நடுவில் அதாவது தலையின் உள் நடுவில் இருந்தால் தான் உயிர் ஆற்றல் தலையில் உள்ள ஐந்து உறுப்புகளுக்கும் சமமாக ஆற்றல் கொடுக்கும்.

அதனால் நமது சிந்தனையின் படி தலையின் நடுவில் தான் உயிர் இருக்க வேண்டும் என்று புலனாகிறது. நமது இந்த முடிவை ஞானிகளின் பாடல்களை கொண்டு சரியா என்று பார்போம்.

திருமூல நாயனார் தமிழ் மறையான திருமந்திரத்தில் அப்பட்டமாக இந்த ஞான இரகசியத்தை கூறியுள்ளார். நமது சிரசில் இருந்து உச்சியிலிருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது! அது நமது கண், காது, மூக்கு உள்ளே சேரும் மத்தியில் , வாயின் உள் அண்ணாகுவின் சற்று மேல் வந்து நிலை கொண்டு , அங்கிருந்து இருநாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடமே சிரநடு.

மற்றுமொரு சித்தர் “உச்சிக்கு கீழ் அண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நித்தம் எரியுதடி ஞான பெண்ணே” என்று உயிர் உள்ள இடத்தை சுட்டி காட்டுகிறார். இதன் மூலம் உயிர் உள்ள இடம் நமது தலை மத்தி என்று புலனாகிறது.

அடுத்தாக தலையின் நடுவில் உள்ள உயிரை எவ்வாறு சென்று அடைவது என்று பாப்போம். இது மிகவும் எளிது. நமது தலையில் உள்ள எந்த உறுப்பில் ஒளி துலங்குகிறது? கண் அல்லவா? ஆம் கண்ணே நமது ஜீவ ஒளியினை பிரதிபளிக்கிறது.

ஒளியாக உள்ள அந்த இறைவனின் அம்சமான உயிரை – ஒளியை கொண்டே தான் அடைய முடியும். அதனால் கண்களே நாம் நமக்குள் உட்புகும் வாசல். கண் ஒளியே இறைவன் திருவடி. மெய்யான ஒளியினை தாங்கி உள்ளதால் கண்ணே மெய்பொருள். இறைவன் திருவடியான கண்களை பிடித்தாலே நம்மை அறிந்து இறைவனை அறிய முடியும்.

கண்ணை பற்றி பாடாத ஞானிகளே இல்லை எனலாம். பரிபாசையாக , நேரடியாக, குறிப்பாக கண்ணையே ஞானிகள் , இறைவனை அடையும் வழி என்று கூறி உள்ளனர்.

கண்ணை பற்றி சொல்லியுள்ள சில ஞானிகளின் பாடல்களை பாப்போம்.

இயேசு கிறிஸ்து :

“தேவன் ஒளியாக உள்ளான், நீ ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம்”.

“கண்ணே சரிரத்தின் விளக்கு. உன் கண்கள் ஒளி மிகுந்ததாக இருந்தால் உன் உடல் ஒளி மிக்கதாக இருக்கும்”

– இதுதான் மூலம் நம் கண் ஒளியை பெருகி அந்த ஒளியில் உள் நடந்து தேவனை தரிசிக்க வேண்டும் என்று தெளிவாக கூறி விட்டார்.

திருநாவுக்கரசர் :

“காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண்”

அபிராமி பட்டர்:

“மணியே , மணியின் ஒளியே, ஒளியின் உணர்வே, அணுகாதவர்க்கு பிணியே, பிணிக்கு மருந்தே” என்று கண்மணியில் ஒளியை நாம் பற்ற வேண்டும் என்று பாடியுள்ளார்.

வள்ளலார்:

“காணும் கண்களுக்கு காட்டும் ஒளியாய், காட்டும் ஒளிக்கு காட்டுவிக்கும் ஒளியாய் பூணும் திருவடிகள்“

திருவருட்பாவில் பல பாடல்களில் திருவடி கண்களே என்று இதை வெளிச்சமாக்கி காட்டி உள்ளார்.

திருவள்ளுவர்:

“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் , மற்றவைகளில் நிலையாமை காணப்படும்”

கடவுள் வாழ்த்து பகுதியில் பத்து பாடல்களில் ஏழு பாடல்களில் அடி என்று குறிபிடுகிறார்.

கண்ணன் என்ற வார்த்தை குறிப்பது கண்ணில் உள்ளவன் அவன் என்பதே.

கிருஷ்ண மணி என்று நாம் நம் கண்மணியையே குறிப்பிடுகிறோம்.

கண்மணியில் , கிருஷ்ணமணியில் பெரும் உணர்வே கிருஷ்ண உணர்வு.

கடோபநிசத்தில் நசிகேதன், மனித தேகத்தில் இறைவன் இருக்கும் இடம் யாது என எமதர்மரஜனிடம் வினவ, அதற்கு எமன், இறைவன் கட்டை விரல் அளவான இடத்தில் புகை இல்லாத ஜோதியாக விளங்குகிறான் என்று பதில் கூறுகிறார். இதுவே ஆதாரம் இதற்கு.

நம் உடலில் கட்டைவிரல் அளவான இடம் என பரிபாசையாக கூறப்பட்டது நமது கண்ணையே. பேரொளியான அருட்பெரும் ஜோதியான இறைவன் புகையில்லாத ஜோதி. நம் கண்மணி உள் இருக்கும் சுயம் ஜோதி. எவ்வளவு பெரிய ஞான இரகசியம். இது தெரிந்தால் தானே தட்சிணாமூர்த்தி உணர்த்தியது போல கண்ணை திறந்து சும்மா இருந்து தவம் செய்ய முடியும்.

ஆதி குரு தட்சிணாமூர்தியும் மோன உபதேசமாக இதையே தெரிவிக்கிறார். சும்மா இரு என்று சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து நாம் சும்மா இருக்க வேண்டிய இடம் – அதாவது நமது மனதை நிறுத்த வேண்டிய இடம் நம் கண்மணியிலே – கண் ஒளியிலே என்று உணர்த்தி உள்ளார்.

சித்தர் சிவவாக்கியர் :

“வலது கண் சூரியன் , இடது கண் சந்திரன்” என நேரடியாக குறிபிடுகிறார்.

பகவத் புராணத்தில் இறைவன் இருதயத்தின் உள் உள்ளார் என்று தெரிவிக்க பட்டு உள்ளது.

இருதயம் என்பது = இரு + உதயம். நமது இரு கண்களே சூரியன் , சந்திரன் உதயமாகும் இடம். ஆம் நமது உடலில் வலது கண் சூரியன் , இடது கண் சந்திரன்.நாம் கோவிலுக்கு சென்று ஆண்டவனுக்கு கற்பூரம் காட்டி நமது கண்களிலேதான் வைத்து கொள்கிறோம்.

8 , 2 ,

சூரியன் , சந்திரன்,

அ, உ,

சக்கரம், சங்கு என்று குறிபிட்டுள்ள அனைத்தும் வலது கண்ணையும், இடது

கண்ணையும் தான் குறிக்கும்.

நமது அடுத்த கேள்வி நம்மால் ஏன் ஆத்மா ஜோதியை நம் கண் ஒளியினை கொண்டு பார்க்க முடிவதில்லை என்பது தான்?

இதற்கான பதில் நாம் செய்த வினைகள் (அ) கர்மம் தான்.

“பற்றி தொடரும் இரு வினை அன்றி வேறு ஒன்றும் இல்லை பராபரமே” – தாயுமான சுவாமிகள்.

நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே அதாவது இறைவனின் அம்சமே நமது உயிர். இவ்வாறு இருப்பின் ஒருவர் செல்வந்தராகவும், மற்றொருவர் ஏழையாகவும், ஒருவர் ஆரோக்கியமாகவும் மற்றொருவர் ஊணமாகவும், நோய் வாய்ப்பட்டும் இருப்பது ஏன்? நம் பிறப்பை , இறப்பை நிர்ணயிப்பது எது?

இதற்கு விடை நாம் இப்பிறப்பிற்கு முன் பற்பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே தான்.

அவரவர் செய்த செயல்களே புண்ணியம் என்றும் பாவம் என்றும் இரு வினைகளாகி அதற்குரிய பலன்களை அவரவரே அனுபவிக்க செய்கிறது. இதுவே இறை நியதி.

எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை, தீவினைகள் இப்படி மூட்டை மூடையாக இருக்கிறது. ஆனால் இறைவன் நம் மீது இரக்கம் கொண்டு, கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல் நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து பிரார்த்துவ கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்க செய்துள்ளார். பிறப்பின் ரகசியம் இது.

இப்பிரார்த்துவ வினைகள் போக மீதம் உள்ளது சஞ்சிதம் (சஞ்சித கர்மம்) எனப்படும்.

பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும். பிராரத்துவம் – விதி-ஆகமியத்தொடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ , அதாவது புண்ணியம் செய்து நல்வினை கூடலாம், அல்லது பாவம் செய்து தீவினை கூடலாம். இப்படி எதாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான்.

ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே.

நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சூட்சுமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது.

வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள் விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள் இதுவே. இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான். இவ்வினைகள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.

இவ்வினை திரையினை அகற்றுவது எப்படி?

இறைவன் திருவடியான நம் கண்ணை – கண்மணியின் ஒளியை பற்றியே.

எவ்வாறு இறைவன் திருவடியை பற்றுவது (அ) பிடிப்பது?

ஒரு தகுந்த ஞான சற்குருவின் மூலம் தீட்சை பெற்று தான்.

ஏன் குரு வேண்டும்?

“மாதா, பிதா, குரு தெய்வம்”.

ஒருவருக்கு தாயும் , தந்தையும் இயற்கையாக கிடைத்து விடுகிறது.

தாய் தந்தை பெற்ற நாம் ஒரு குருவை அடைந்து உபதேசம் , தீட்சை பெற்று தவம் செய்தே இறைவனை அடைய வேண்டும். இதுவே இறை விதி.

குருவின் முக்கியதுவத்தை உணர்த்தவே அவதாரங்களான ஸ்ரீ ராமரும் , கிருஷ்ணரும் குருவை தேடி சென்று நல்ல சீடர்களாக இருந்தார்கள்.

இயேசு நாதர் யோவானிடம் ஞானஸ்தானம் பெற்றார்.

அருணகிரிநாதருக்கு முருக பெருமானே குருவாக வந்தார்.

வள்ளலார், மாணிக்கவாசகர் போன்ற பிறவி ஞானிகளுக்கு இறைவனே குருவாக வந்தார்.

குருவின் முக்கியத்துவத்தை உணர்த்த சிவபெருமானே “ஆதி குரு தக்ஷினாமூர்த்தியாய் “ சனகாதி முனிவர்களுக்கு அருளினார்.

இங்கு நன்றாக கவனியுங்கள் யாருக்கும் இறைவன் நேரடியாக அருளவில்லை , முதலில் தானே குருவாகி தன்னை அடைய வழி கட்டினான். நம் அனைவர்க்கும் இது பொருந்தும்.

நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நமது சுற்றம், தாய் தந்தையர், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் இயற்கை நமக்கு பல விஷயங்களை கற்று கொடுத்துள்ளது. இவைகளை எல்லாம் நமக்கு உலகியல் விஷயங்களை மட்டும் தான் கற்று கொடுத்துள்ளது. இவைகள் எல்லாம் ஆண்டவனிடம் நம்மை அழைத்து செல்லாது.

யார் ஒருவர் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கிறரோ அவரே ஒருவருக்கு குரு ஆவார். நம் உடலில் உள்ள “சத்”யத்தை (உயிர் – இறை அம்சம் ) பற்றி சுருதி, யுக்தி மற்றும் வாக்கியத்தால் புரிய வைத்து அந்த இறைவன் துலங்கும் இடத்தை (கண்களை) கூறுகிறாரோ அவரே சத்குரு. இந்த சத்யத்தை உணர நம் கண்களுக்கு உணர்வு கொடுத்து(தீக்ஷை) , தவம் செய்ய வழி காட்டுபவரே ஞான சற்குரு. இப்படி பட்ட ஞான சற்குருவை பெற்றவனே பாக்கியவான். அவனே தவம் செய்து இறை அருள் பெறுவான்.

“குருவில்லா விதை பாழ்”

“குருவின் அடி பணிந்து கூடுவார் அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்”

“தகுந்த ஞான ஆசிரியன் கொண்டு உங்கள் நடு கண் புருவ பூட்டை திறந்து கொள்வது நலம்.”

“குரு பிரம்மா , குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வரா, குரு சட்சாத் பர பிரம்மா”

– குருவின் பெருமையை இவைகள் உணர்த்தும்

மனு முறை கண்ட வாசகத்தில் பெரிய குற்றமாக வள்ளலார் இதனையும் வலியுறுத்தி கூறுகிறார்

“குருவை வணங்க கூசி நின்றேனோ”

“குருவுக்கு காணிக்கை கொடுக்க மறந்தேனோ”

நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. குரு தனது கண் ஒளியின் மூலம் நமது கண் ஒளியை தூண்டி , கண்மணிக்கு உணர்வு கொடுத்து சூட்சும சாரிரத்தை பிறக்க செய்கிறார். இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.

“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம் இதுவே.

தீட்சை பெற்றவனே துவிஜன் ஆகிறான். துவிஜன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சாம்ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.

மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.

ஞான சரியையில் வள்ளல் பெருமான் கூறும் தவம் இதுவே “நினைந்து நினைந்து – நம் கண்மணியை நினைந்து நினைந்து , உணர்ந்து உணர்ந்து – கண்மணியில் தீட்சையின் மூலம் பெறப்பட்ட உணர்வை உணர்ந்து, இதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் நெகிழ்ந்து அதனால் வரும் கண்ணீரில் நனைந்து” என்று தவம் செய்யும் முறையை ஞான சரியையாக வள்ளல் பெருமான் குறிபிடுகிறார்.