User:Brindhukar
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்கடி தமிழ்க்குடி.தொன்மையை உடைய தமிழ் இனமும் தமிழ் மொழியும் பெருமை வாய்ந்ததாகும்.
இந்திய அரசால் அதிகாரப் பூர்வமாக 2004-ஆம் ஆண்டு தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப் பட்டது.
தொன்மை, தனித்தன்மை, நடுநிலைமை, கலை, மொழிக் கோட்பாடு, பிற மொழித்தன்மை போன்ற பதினொரு தகுதிகளைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு மொழியானது செம்மொழியாக அறிவிக்கப்படும்.
செம்மொழி என போற்றப்படும் நமது தாய்மொழியை தூய தமிழில் பேசாவிடினும் பிற மொழிச்சொற்கள் கலப்பு இல்லாமல் பேச வேண்டும்.
நுனி நாவினால் பேசும் ஆங்கிலத்தை பெருமையென நினைத்து தமிழ் மொழியை இகழ்வோர்க்கு இதோ பாரதிதாசனின் வரிகள்,
"தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே தமிழைப் பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே”
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் இவை அனைத்தும் இன்றைய நிலையில் உள்ள புதுக்கவிதைகளான ஹைக்கூ என்று சொல்லக் கூடிய துளிப்பாவாகவும் சென்ரியு எனக்கூறும் நகைத் துளிப்பாவாகவும் மாற்றம் பெற்றுவிட்டது.
" சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே "என்கிறார் பாரதி. அப்படிப்பட்ட தமிழ்ச் சொற்களை விடுத்து, ஆங்கில மொழி கலந்து பேசுவது மட்டுமல்லாது தமிழ்ச் சொற்கள் என்று நினைத்துக் கொண்டு பிற மொழிச் சொற்களை பேசிக்கொண்டிருக்கிறது தமிழினம்.
"பிறமாந்தர் அவர் மொழியே பேசுகின்றார் பிழையாக இங்கே தான் ஏசுகின்றார் மறவேந்தர் காத்தமொழி பேசுதற்கு மனமின்றி அறிவின்றி கூசுகின்றார்" - என தமிழ் மொழியில் பேச வெட்கப்படுபவர்களை சுட்டிக் காட்டுகிறார் முடியரசன்.
இவ்வாறு தமிழ்மொழியின் இன்றைய நிலையை இக்காலக் கவிஞர்கள் எடுத்துரைக்கின்றனர்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம்நாட்டில் இன்று தமிழ்மொழியே இல்லாத கல்விச் சாலைகள் வந்த காரணத்தை அறிய முடியவில்லை.
ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்க்கு கல்வியை விடச் சிறந்தது முதலில் ஒழுக்கமே எனக் கற்றுத் தருவார்கள். இன்றைய காலத்தில் இவ்வொழுக்கங்களில் இருந்து தவறுவதால் தான் சமூகத்தில் பல சீர்கேடுகள் நிகழ்கின்றன.
சமூகம் சீராக இருக்க வேண்டுமெனில் அக ஒழுக்கங்களையும் புற ஒழுக்கங்களையும் கற்றுத்தரும் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை புறம் தள்ளாமல் அறிந்து கொண்டு அதன்வழி நடக்கவேண்டும்.
தமிழ்மொழி பேசுவதால் தமிழர் எனப் பெயர் பெற்றனர். ஆனால் சில தமிழர்கள் தான் பெற்ற பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்க வெட்கப்படுகின்றனர்.
"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமென்பார்கள் ”அதைப் போல் கவி மழையாகப் பொழிந்த நம்திரு நாட்டில் இன்றைய திரையுலகில் முழுமையான தமிழ்ப்பாடல்களைக் கேட்பதென்பதே அரிதாகிவிட்டது.
நாம் உண்ணும் உணவில் கலம்பு செய்ததை அறிந்ததும் பொங்கி எழுகிறோம். ஆனால், "நமக்கு அமுதளித்த தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பு செய்தால் ஏன் அமைதி காக்கிறோம்".
பிற மொழிகளைக் கற்பதில் தவறில்லை ஆனால் நம்மொழியில் பிறமொழிகளைக் கலப்பது தவறாகும்.
செந்தமிழ்,பைந்தமிழ், தண்தமிழ்,முத்தமிழ், அருந்தமிழ்,கன்னித்தமிழ்,அழகுத்தமிழ்,ஒண்தமிழ், அன்னைத் தமிழ், தீந்தமிழ் என பல்வேறுப் பெயர்களில் புகழப்படும் தமிழ்மொழியை இகழ்தல் குற்றமாகும்.
தாயைத் தொலைத்தவர்க்கு தாயின் அருமை தெரிவது போல், தாய்நாட்டிற்கு அப்பால் சென்றவர்க்கே தாய்நாட்டின் பெருமையும் தாய்மொழியின் அருமையும் புரியும் என்பார்கள்.
பிற மொழிகள் நம்மிடையே இருந்தாலும் நம் தமிழ்மொழியின் தனித்துவம் என்றும் அழிவுறாது என்பதற்கு இதோ சான்றுகள்.
கல்வெட்டுக்களும், ஓலைச் சுவடிகளும், செப்புப் பட்டயங்களும் தாங்கி கொண்டிருந்த தமிழ்மொழி இன்று கணினியிலும் இணையத்திலும் பல நவீன ஊடகங்களிலும் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஈரடியும் நாலடியும் போதாதென்று தமிழ்மொழியின் தொன்மையைக் கூற கீழடியும் எழுந்துள்ளது.
தமிழ் பயின்றவர்களுக்கு ஆசிரியப்பணி மட்டுமே என்பதல்ல ஊடகத்துறை, பத்திரிக்கை, பதிப்பகம், இதழியல், அச்சகம், தொலைக்காட்சி, வானொலி என பல துறைகளிலும் பணி புரிய வாய்ப்புகள் இருக்கின்றன.
அச்சுப்பொறி உதவியால் இன்றளவில் தமிழில் பல புத்தகங்கள் கவிதைகளாகவும், கதைகளாகவும், புதினங்களாகவும் வெளிவருகின்றன.தமிழில் நாம் எழுதும் ஒவ்வொரு சிறந்த படைப்புகளுக்கு விருதுகளும், பரிசுகளும், ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ்மொழி இன்றும் பல நாடுகளில் அலுவல் மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருப்பது வியப்புக்கும் சிறப்புக்கும் உரியதாகும்.அச்சிறப்புகளுக்குரிய தமிழ்மொழியின் இலக்கிய இலக்கணங்களை பிற நாட்டவர்களும் நாட்டம் கொண்டு பயில்கின்றனர்.
" வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்," என்று பாவேந்தர் கூறுவது போல் இனியேனும் வெட்கப்படுவதை விடுத்து தமிழ்மொழியில் பேச பெருமிதம் கொள்வோம்.