Jump to content

User:MugilanCT

From Wikipedia, the free encyclopedia

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு!*

     நனிசிந்தும் ஞாலத்திடையே ஐம்பெரும் ஆற்றல்களின் அலகிலா விளையாட்டுகள் எண்ணிலடங்கா. அவற்றை அழகாக்கி அணிசெய் மணம் நுகர்ந்து மறுமலர்ச்சி காண்பதற்கே மாந்தன் படைக்கப்பட்டான். பிறப்பும் - இறப்பும், விதைப்பும் - அறுப்பும், பொழிவதும் - காய்வதும் இயற்கையாகிப் போன உலகத்தில் மாந்தனின் வாழ்க்கை மட்டும் எத்தனை காலத்துக்கு நீட்டிக்கப்படும் என எண்ணிப் பார்த்தால், காடுகளும், மலைகளும், நிலங்களும், ஆழிகளும், பனியும் நெருப்பும் இவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து நீர்க்குமிழி வாழ்க்கைதான் நமக்கு சொந்தமாகின்றது எனப் புரிந்து கொள்ள முடிகிறது.
     சங்கிலித் தொடர் போன்று நீட்டிக்கப்பட்டால் ஒருவேளை தோன்றும் மாந்தன் அழிந்தாலும் அல்லது புதைந்தாலும், மாந்தரினம் நீட்டிக்கப்படலாம் என்று கருதியே ஐம்பெரும் ஆற்றல்கள் தன்னூடே வாழும் பன்னூறு உயிரினங்களுடன் மாந்தனையும் அதாவது மாந்தரினத்தினையும் வாழ அனுமதித்துள்ளன. 
    அப்படியானால் நாம் பிறந்து வாழ்ந்து இறந்தாலும், நமக்குப் பிறந்தவர் மூலமாக மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேயுள்ளோம், மாந்தரினத் தொடர்ச்சிக்காக.
      ஏழாவது தலைமுறையினராக வாழும் ஒவ்வொரு மாந்தனும் தனக்கு மேலுள்ள ஆறு தலைமுறையினரின் அறிவு ஒளியினை, விழுக்காட்டின் அடிப்படையில் ஈர்த்து கருத்துடன் களம் கண்டு மடிகின்றான். அதில் சிலர் மட்டும்தான் புகழுடம்பு எய்துகின்றனர்.
      இதையெல்லாம் காண்கிற போது, துறைசார் அறிவொளியாளர்கள் காலம்தோறும் தோன்றி வருவதாக நாம் அறிகின்றோம். தோன்றியவர்கள் விட்டுச் செல்லும் எச்சம் தான் ஒவ்வொருவரையும் இன்னின்ன காரணத்திற்காக வாழுகின்றார்கள் என உலகத்தார் அடையாளம் காட்டி, கண்டு வாழுகின்றார்கள். முடிந்தால் அத்தகையவர்களைப் பின்பற்றவும் முனைகின்றார்கள்.
      புகழுலகில் இன்றளவும் வாழுகின்றவர்களில் ஒருவராகக் காணப்படுபவர் 'செந்தமிழ் வல்லுந‌ர்' புலவர் செ.வரதராசனார் அவர்கள்.
      அன்றைய ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட்த்தில் உள்ள கல்லக்குறிச்சி வட்டத்தின் மோ.வன்னஞ்சூர் என்ற சிற்றூரில் திரு கு.செல்லப்பிள்ளை - இராமானுசம் அம்மாள் இவர்களின் தலைமகனாக 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 25 - ஆம் நாள் பிறந்தார்.
    உள்ளூரில் துவக்கப் பள்ளியிலும், கல்லக்குறிச்சியில் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். திண்டிவனம் அருகிலுள்ள மைலம் தமிழ்க் கல்லூரியில் படித்து, புலவர் பட்டத்தைப் பெற்றார்.
    ஈரோடு நகருக்குச் சென்று 'இனக்கொழுநன்' தந்தை பெரியார் அவர்கள் வீட்டிலேயே ஒரு வாரம் தங்கியிருந்து, தந்தை பெரியார்அவர்களிடமே நேரடியாகப் பகுத்தறிவு விளக்கத்தை ஈட்டிக் கொண்டார்.
      சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்து முடித்தார். பொன்னேரி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் ஆனார். சென்னை, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணிக்கு அழைப்பு வந்த போது, அதையும் ஏற்காமல் பொன்னேரியில் இருந்தும் விடுபட்டு சொந்த ஊரான தென்னாற்காடு மாவட்டம் கல்லக்குறிச்சிக்கே திரும்பினார்.
    நெல்லிக்குப்பம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம் மற்றும் கல்லக்குறிச்சியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இதற்கிடையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தார். கூடுதலாக இளங்கலைக் கல்வியியலையும் முடித்தார். நிறைவாக குதிரைச்சந்தல் என்னும் ஊரில் அரசுயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஆனார். அங்கேயே பணிநிறைவும் செய்தார். 
     இதற்கிடையில் கல்லக்குறிச்சியில் வாலிபர் சங்கத்தைத் தோற்றுவித்தார். இரவுப் பாடசாலையில் திருக்குறளையும் சேர்த்து படிக்கச் செய்தார். சிற்றூர்களில் திருக்குறளை பரப்பி வந்தார். கல்லக்குறிச்சியில் 'திருக்குறள் - மாணவர் மாநாடு'தனை நடத்தினார். திருவள்ளுவரையும் திருக்குறளையும் தேரில் வைத்து நகரில் ஊர்வலமாய் அழைத்து வந்தனர். மேலும் திரு.வி.க. தமிழ் மாநாடு நடத்தினார்.
     பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனவுடன் 1967 -ஆம் ஆண்டு அழைத்து வந்து கல்லக்குறிச்சியில் தமிழ் இலக்கிய மன்றத்தை, புலவர். அரங்கநாதன் தலைமையில் பேரறிஞர் தொடக்கி வைக்க விழாவை நடத்தி மகிழ்ந்தார்.
     வாலிபர் சங்கம் கல்லைத் தமிழ்ச் சங்கமாக மாற்றப்பட்டது. 
     திருக்குறளுக்கு வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் விளக்க வகுப்புதனை நடத்தினார். முழுமையாக மூன்று முறை இங்ஙனம் நடத்தி முடித்துள்ளார். 'குறள்மணம்' என்ற திங்களிதழை பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தியுள்ளார். அனைத்து அரசு நூலகங்களிலும் அவ்விதழ் வாங்கப்பட்டன.
     அகில இந்திய வானொலியில் பாவேந்தர் பாரதிதாசனின் சேர தாண்டவம், இருண்ட வீடு ஆகிய இரண்டினையும் நாடக ஆக்கம் செய்து, அனைத்து நிலையங்களும் அஞ்சல் செய்யக் கண்டார். இது போல பல கவியரங்கங்கள் புத்தாண்டு உட்பட வானொலியில் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று பல தமிழ்க் கூட்டங்களில் பேசியுள்ளார். 
      சென்னையில் 'குறள்ஞானி' முனைவர் கு.மோகனராசு அவர்கள் 'உலகத் திருக்குறள் உயராய்வு மையம்' தொடங்கிய போது புலவர் செ.வ. அவர்களும் அவரோடு இணைந்து பல நிகழ்ச்சிகளிலும், திருக்குறள் மாநாடுகளிலும் கவந்து கொண்டார். தென் மாவட்டத்தில் மையத்தால் நடத்தப்பட்ட திருக்குறள் நடைப்பயணத்தில் பத்து நாள்களும் கலந்து கொண்டார்.
     புதுதில்லியில் தமிழுக்கு 'செம்மொழி'த் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, அறிஞர்களுடன் சேர்ந்து உண்ணாநிலை மேற்கொண்டு போராடியுள்ளார்.
       மணக்கும் மலர்கள் - கவிதைத் தொகுப்பு, திருக்குறள் - பாயிரம் காட்டும் பண்பாடு, திருக்குறள் - காமத்துப்பால் வழங்கும் வாழ்வியல் நெறிகள், தமிழ்ப் பாவை, தமிழ்த்தாய் - திருப்பள்ளி எழுச்சி, கண்ணகி - தமிழரின் பண்பாட்டுச் சின்னம், புலவர் செ.வரதராசன் கவிதைகள், திருக்குறள் - உண்மை உரை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பல திங்கள் இதழ்களில் பன்னூறு கட்டுரைகளை வரைந்துள்ளார்.
      டாக்டர் மு.வ., டாக்டர் மெ.சுந்தரம், நாவலர், இனமானப் பேராசிரியர், டாக்டர் நாவலர், பெருஞ்சித்திரனார், முனைவர் மா.நன்னன், திருக்குறளார், கல்லை தே.கண்ணன், பாவேந்தர் பாரதிதாசன், உவமைக் கவிஞர், மன்னர் மன்னன், அடிகளாசிரியர், சிலம்பொலியார் உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தார். 
      'மாந்தர் தொண்டே மா தொண்டு' என்பதை உணர்ந்த காரணத்தாலேயே கல்லக்குறிச்சியில் தனது இல்லத்திற்கு முன்பும், நகரின் மையப் பகுதியிலும் திருக்குறள் பலகைகளை நிறுவினார். அதில் நாள்தோறும் 'குறள்மணம்' என்ற தலைப்பில் ஒரு குறளும் அதன் பொருளும் என எழுதி வாழ்வியலுக்கு உட்படுத்தினார்.
      திருக்குறள் வழித் திருமணங்களை, பன்னூறு அளவில் மூன்று தலைமுறை மக்களுக்கு நடத்தி மாந்தர்களின் இல்வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி உள்ளார்.
       தம் இல்லத்திற்கருகே காலை - மாலைப் பொழுதுகளில் உலா வரும் சிறுவர்களுக்கு 'ஒரு குறளுக்கு ஓர் இனிப்புக்கட்டி' வழங்கி வந்தார். அதனாலேயே புலவர் செ.வரதராசனார் ஐயா அவர்களை சிறுவர்கள் 'திருக்குறள் தாத்தா' என அழைக்கலாயினர்.
       தமிழ்நாடு அரசின் 'நல்லாசிரியர்' விருதுதனை 1975 ஆம் ஆண்டிலும், 'திருக்குறள் நெறித் தோன்றல்' விருதுதனை 1990 ஆம் ஆண்டிலும் பெற்று மகிழ்ந்தார். முன்னதாக, புலவர் வீரன் அவர்கள் நடத்தி வந்த தென்கீரனூர் சுரதா மன்றம் வழங்கிய 'செந்தமிழ் வல்லுந‌ர்' என்ற விருதுதனை உவமைக்கவிஞர் சுரதா அவர்களாலேயே வழங்கப் பெற்றார். இப்படி ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கின்றார். அனைத்திற்கும் மேலாக கடந்த 17-01-2012 - ஆம் நாள், தனது 87 -ஆம் அகவையில் தமிழ்நாடு அரசின் 'திருவள்ளுவர் விருது[1]'தனைப் பெற்றார்.
      செந்தமிழ் வல்லுந‌ர், குறள்மணம் புலவர் செ.வரதராசனார் அவர்கள் உருக்குமணி அன்ற அம்மையாரை மணந்து ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். ஆறு ஆண் மக்கள் நிறைவில் ஏழாவதாகப் பெண் மகள் எனப் பிறந்தனர். அனைவருக்கும் தூய தமிழில் பெயரிட்டு வளர்த்தார். ஒரே ஒரு மகனுக்கு மட்டும் தனது தாயாரின் நினைவாக இராமாநுசன் என்று பெயரிட்டிருந்தார். மூத்த மகனைத் தவிர (குழந்தையாக இருந்த போதே மறைந்தவர்) அனைவருக்கும் திருமணமாகி பெயரப் பிள்ளைகள் மற்றும் கொள்ளுப் பெயரர்களுடன் உள்ளனர். 
       குறள்மணம் புலவர் செ.வரதராசனார் அவர்கள் தனது 88 - ஆம் அகவையில் 13-04-2013 ஆம் நாள் உடல்நலம் குன்றி இயற்கை அடைந்தார். ஐயா அவர்களின் விருப்பப்படி, அன்றே அவரது கண்களும், மறுநாள் 14-04-2013 அன்று அவரது முழு உடலும் கொடையாக மருத்துவ உலகிற்கு வழங்கப்பட்டன. ஐயா அவர்களின் மறைவிற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஐயா அவர்களின் துணைவியார் திருமதி உருக்குமணி அம்மாள் மறைந்த போது அவரது இரண்டு கண்களும் கொடையாக வழங்கப்பட்டன.
      வாழும் போது தமிழ், திருக்குறள் என வாழ்ந்தவர் தான் புலவர் செ.வரதராசனார் அவர்கள். அவரது வாழ்க்கைக்குப் பிறகும் தமிழர்களின் மருத்துவ உலகிற்கு அவரே கொடையாகிப் போனார். 

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' என்ற திருக்குறளுக்குப் பொருந்தி விட்டார் புலவர் அவர்கள்.

    அவர் எழுதிய திருக்குறள் உண்மை உரை நூல் அவரது மறைவிற்குப் பிறகு சென்னை மணிவாசகர் பதிப்பகத்தாரால் வெளியிடப்பெற்றது. 
   25-04-1925 இல் பிறந்த ஐயா அவர்கள் 13-04-2013 இல் மறைந்தார். தான் பிறந்த திங்களிலேயே மறைந்த பெருமகனார் புலவர் செ.வரதராசனார் அவர்கள்.
      அடுத்த ஆண்டான 2014 -இல் இருந்து கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் 'புலவர் செ.வரதராசனார் - குறள்மணம் விருது' சிறந்த திருக்குறள் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 2019 - ஆம் ஆண்டு வரையில் பதினான்கு அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020 - ஆண்டு கொரோனா தொற்று காரணமாக விழா நடைபெறவில்லை. இவ்வாண்டில் வருகின்ற 18-04-2021 அன்று 'கல்லைத் தமிழ்ச்சங்கம்' சார்பில் தலைவர் 'அருள்நிதிப் பேராசிரியர்' செ.வ.புகழேந்தி அவர்கள் 'குறள்மணம் - புலவர் செ.வரதராசனார் விருது'தனை வழங்கவுள்ளார். ஆய்வறிஞர் பி.கே.கோவிந்தராசனார் அவர்கள் - திருவண்ணாமலை மற்றும் தமிழ்ச்செம்மல் - குறள்இனிது சோம.வீரப்பன் அவர்கள் - திருவரங்கம் இருவரும் கடந்த 2020 - ஆம் ஆண்டிற்கான விருதுதனைப் பெறுகின்றனர். தமிழ்ச்செம்மல் புலவர் பெ.சயராமன் அவர்கள் - கல்லக்குறிச்சி இவ்வாண்டு 2021 - ஆம் ஆண்டிற்கான விருதுதனைப் பெறுகின்றார்.
      அரியன செய்து, காலங்கடந்தும் வாழுகின்ற மாந்தர்களுள் ஒருவர் தான் குறள்மணம் புலவர் செ.வரதராசனார் என்றால் அது மிகையல்ல! 
      

வாழ்க தமிழ்! வளர்க புலவர் செ.வ.புகழ்!!

  1. ^ Thiruvalluvar Awards. https://en.wikipedia.org/wiki/Thiruvalluvar_Award#Recipients. {{cite web}}: Missing or empty |title= (help)