User:Throwpathiamman
சேலம் கந்தம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திரவுபதி அம்மன் ஆலயம்.
மகாபாரதத்தின் நாயகி திரவுபதி. துருபதன் என்ற மன்னன் பாஞ்சாலதேசத்தில் நல்லாட்சி செய்து வந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு வாரிசு வேண்டியும், துரோணரை அழிப்பதற்காகவும் ஒரு பெரிய யாகம் செய்தான். அந்த யாகத்தில் அவனுக்கு ஒரு மகனும், மகளும் தோன்றினார்கள். மகனுக்கு துஷ்டத்துய்மன் என்றும், மகளுக்கு திரவுபதி என்றும் பெயரிட்டார்.
திரவுபதி முற்பிறவியில் நளாயினியாகப் பிறந்தவள். மறு பிறவியில் காசி ராஜனுக்கு மகளாகப் பிறந்து சிவபெருமானை நோக்கி தவமிருந்தாள். அவளது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய சிவபெருமான் அவள் முன் தோன்றினார்.
‘பெண்ணே, உன் தவத்திற்கு மெச்சினோம். என்ன வரம் வேண்டும்? கேள்” என்றார் சிவபெருமான்.
ஈசனைக் கண்ட மகிழ்விலும், பதற்றத்திலும், அவள் தன்னை மறந்து ‘பதம் தேஹி’ என ஐந்து முறை கூறினாள்.
‘மறுபிறவியில் உனக்கு அந்த பாக்கியம் கிட்டும்’ என அருள்புரிந்து மறைந்தார் ஈசன். அதன்படியே துருபதன் நடத்திய வேள்வியில் திரவுபதியாக உருக்கொண்டாள்.
கன்னிப் பருவம் அடைந்ததும் அவள், சுயம்வரம் மூலமாக அர்ச்சுனனை மணந்தாள். பின், அர்ச்சுனன் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்களும் குந்திதேவியை சந்திக்கச் சென்றனர். பஞ்ச பாண்டவர்கள் வீட்டில் வாசலில் நின்றபடி, ‘தாயே! கனி கொண்டு வந்துள்ளோம்’ என குந்தியிடம் கூற, குந்தியும் திரும்பி பாராது ‘பகிர்ந்து உண்ணுங்கள்’ என்றாள். பின் கனிக்குப் பதிலாக திரவுபதி இருப்பதைக் கண்ட குந்திதேவி பதறினாள்.
அப்போது குந்தியின் முன் தோன்றிய நாரதர், ‘திரவுபதி முற்பிறவியில் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தாள். அந்த தவத்தின் பலனாக ஐந்து சிவ கணங்களும் அவளுக்கு கணவர்களாக இப்போது வாய்த்துள்ளனர்’ என்றார்.
திரவுபதியும் ஐவரையும் சிவ சக்தியாக மணந்து பராசத்தியாக வாழ்ந்தாள்.
பாரதப்போர் நடந்து கொண்டிருந்த போது, கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்கு திரவுபதி காளியின் வடிவம் என்பதை உணர்த்தினார்.
தருமர் சூதாடி திரவுபதியை இழந்தார். துச்சாதனன் துரியோதனனின் பேச்சைக் கேட்டு, திரவுபதியை துகிலுரித்தான். சினம் கொண்டாள் திரவுபதி. ‘பாண்டவர்கள் கவுரவர்களை போரில் வென்ற பின்பே தன் கூந்தலை முடிவேன்’ என சபதம் செய்தாள்.